Rock Fort Times
Online News

மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும்- திருச்சி கேம்பியன் பள்ளி 90வது ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு…!

திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாகவும், கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு, கலை என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துவரும் கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக 90 வது ஆண்டு விழா, மாண்போர்ட் கபிரியேல் சபையின் அருட்சகோதரர்கள் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற 50- வது ஆண்டுப் பொன்விழா, புனித மாண்போர்ட் அவர்களின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா ஜனவரி 31, பிப்ரவரி 1 என இரண்டு நாட்கள் நடைபெற்றன. முப்பெரும் விழாவின் முதல் நாளாகிய 31.01.25 அன்று காலை அருட்தந்தையர்களின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேம்பியன் பள்ளி 90 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளையும், மாண்போர்ட் சபை அருட்சகோதரர்களின் 50 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளையும் காட்சிப்படுத்திய கண்காட்சியினை செயின்ட் ஜோசப் கல்லூரியின் இயக்குநர் அருட்தந்தை பால்ராஜ் திறந்து வைத்தார். அன்று மாலை நடைபெற்ற 90-வது ஆண்டு விழாவிற்கு கேம்பியன் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை வகித்தார். கேம்பியன் பள்ளியின் முன்னாள் மாணவரும், திரைப்பட நடிகருமான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகவும், முன்னாள் மாணவரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் கௌரவ விருந்தினராகவும் பங்கு கொண்டு விழாவினை சிறப்பித்தனர். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து மாணவர்கள் வரவேற்புரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் முதல்வர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சிவகார்த்திகேயன் பேசுகையில், தான் கேம்பியன் பள்ளியில் பயின்ற அனுபவங்களையும், தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் குறித்து நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். இப்பள்ளியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதாக பெருமைப்பட தெரிவித்தார். தான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்ததுபோல் ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்து பலதுறைகளிலும் சாதிக்க வேண்டும். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் மன அழுத்ததை எவ்வகையிலும் உருவாக்கிக் கொள்ளாமல் மகிழ்ச்சியாகப் படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதாக கூறினார். கௌரவ விருந்தினர் ஆகாஷ் பாஸ்கரன் பேசுகையில், கேம்பியன் பள்ளியில் பயின்றதை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் பள்ளி இன்னும் மேன்மேலும் வளர தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

தொடர்ந்து, கேம்பியன் பள்ளியில் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற இருக்கும் இளங்கலை ஆசிரியர்கள் சேதுராமன், தனசேகர், முதுகலை ஆசிரியர் ஆரோக்கியம் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஓய்வு பெற இருக்கும் அவர்கள் மூவரும் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றினர்.  மேலும், எம்பவர் டு எலிவேட்’ எனும் தலைப்பில் மாணவர்களின் நடனம், ‘அறம் காப்போம்’ எனும் தலைப்பில் தமிழ் நாடகம்,’டோஸ்ட் ஆஃப் சக்ஸஸ்’ எனும் தலைப்பில் மாணவர்களின் பிரம்மாண்ட நடனம்  நடைபெற்றது.

முடிவில், ‘லெகசி அஃப் லைட்’ எனும் ஜூபிலி பாடலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். பள்ளியின் 2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், சாதனைகள், ஆண்டறிக்கையினை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ், துணை முதல்வர் அருட்சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் அருட்சகோதரர்கள், இருபால் பணியாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்