மாணவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாக திகழ வேண்டும்…* திருச்சி கேம்பியன் பள்ளி ஆண்டு விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு!
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 91-வது ஆண்டு விழா 16.10.2025 (வியாழக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை வகித்தார். முக்கிய விருந்தினராக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவரும், திண்டுக்கல் நாகா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கமலக்கண்ணன், பள்ளியின் முன்னாள் மாணவரும், திருச்சி ஜோதி குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.செல்ல ராமசாமி, சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளியில் 21 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் இளநிலை உதவியாளர் ஹானரின் எலிசபெத் ராவி, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் மற்றும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவருமான முனைவர் ஜெ.ராஜேஷ்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பள்ளியின் முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து பள்ளியில் கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், முதன்மை விருந்தினர் முனைவர் கிருஷ்ணன் பேசுகையில், கேம்பியன் பள்ளியானது திருச்சியின் அடையாளமாக விளங்குவதை எண்ணி பெருமை கொள்கிறேன். இப்பள்ளி மாணவர்கள் உலகம் முழுவதும் சென்று சாதனைகள் பல புரிந்து பெருமை சேர்க்கிறார்கள். கல்வி என்பது மாணவர்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கு மட்டும் அல்லாது சமுதாய முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளர் கமலகண்ணன், மாணவர்கள் தங்களது பள்ளி நாட்களில் ஒவ்வொரு ஆசிரியரிடம் இருந்து ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கருத்துகளைக் கற்றுக்கொண்டு அவற்றை கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்று கூறினார். சிறப்பு அழைப்பாளர் செல்ல ராமசாமி, மாணவர்கள் பள்ளியில் நடக்கும் போட்டிகளில் ஏதேனும் சில போட்டிகளிலாவது பங்கு பெற வேண்டும். சமூக ஊடகங்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். கேம்பியன் பள்ளியில் 21 ஆண்டுகள் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெறும் ஹானிரின் எலிசபெத் ராவி, தமிழ்நாட்டின் நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு விழாவை முன்னிட்டு விண்ணகத்தின் நீதி என்ற ஆங்கில நாடகம், யார் பொறுப்பு? என்ற தமிழ் நாடகம் மாணவர்களுக்கு நன்னெறிகளை வளர்க்கும் விதமாகவும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் விதமாக அமைந்திருந்தது. மாணவிகளின் ஒடிசா மற்றும் குஜராத்தி நாட்டுப்புற நடனம், ஒளிரும் வகையில் அமைந்த நடனம் காண்போருக்கு வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ், துணை முதல்வர் அருட்சகோதரர் மைக்கேல் ராஜா மற்றும் அருட்சகோதரர்கள், இருபால் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.