திருச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…
போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை....
திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு குற்றச் செயல்கள் எங்காவது நடந்தால் அதனை உடனுக்குடன் காவல் துறையினருக்கு தெரிவிக்க செல்போன் எண்களையும் கொடுத்துள்ளனர். அந்தவகையில் திருவெறும்பூர் பகுதிக்கு கொடுக்கப்பட்ட 94874 64651 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட ஒருவர், திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் போதை ஊசி விற்கப்படுவதாக தகவல் கொடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், திருவெறும்பூர் டி.எஸ்.பி.அறிவழகன் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது காட்டூர் பகுதியில் போதை ஊசியுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சென்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போதை ஊசிகளை விற்றதும், அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் திருநாவுக்கரசு (34) என்பதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த போதை ஊசிகள் மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போதை பொருட்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 2 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது .
இது சம்பந்தமாக போலீஸ் எஸ்.பி. வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணப்பாறையில் போதை ஊசி விற்ற கும்பல் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஒரு செயலி மூலம் ஓரின சேர்க்கையாளர்களை சேர்த்துக்கொண்டு போதை ஊசிகளை விற்று வருகிறார்கள். அந்த செயலியை கண்காணித்து வருகிறோம். போதைப் பொருள்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரயில்கள், பேருந்துகள், கொரியர் சர்வீஸ் மூலமாக வருகிறது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். விரைவில் அந்த கும்பலையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையில் மன அழுத்தம் பொதுவானது. பணி கூடும்போது மன அழுத்தம் இருக்க தான் செய்யும். அவர்களுக்கு பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கிறோம். திருவெறும்பூர் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை தடுப்பதற்காக கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது குறித்தும், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுக்கு என தனி இன்ஸ்பெக்டர் நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் 45 பேர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார். அப்போது திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், திருச்சி ஸ்பெஷல் டீம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.