Rock Fort Times
Online News

மது குடித்துவிட்டு பணிக்கு வரும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை…! * போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை

மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், சில அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி விட்டு பணிக்கு வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன. போக்குவரத்து கழக ஊழியர்கள் மது குடித்துவிட்டு பணிக்கு வரக் கூடாது எனவும், அதற்கான தண்டனை குறித்தும் சுற்றறிக்கை வாயிலாக பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தியிருப்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால் மது அருந்தியதாக முன் வைக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது எழும் புகாரையும் முற்றிலும் தவிர்க்கும் வகையில் மது குடித்துவிட்டு பணிக்கு வருவோருக்கு கடும் தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதன்படி, மதுபோதை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அரசின் அனுமதிக்கு பிறகே மீண்டும் பணியில் சேர முடியும். மண்டல அளவில் பணியிடமாற்றம், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படக் கூடும். இதுதொடர்பான ஆலோசனைகளுக்கு பிறகு அரசுமூலம் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மனஅழுத்தம் உள்ளிட்டவற்றால் மதுபோதைக்கு ஆளான ஊழியர்களுக்கான மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்