திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். பாரதீய கிசான் சங்கத்தின் சார்பாக, மேட்டூர் அணையின் நீர் இருப்பு கவலையளிக்கும் வகையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கருகி வரும் குறுவை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் சம்பா சாகுபடிக்கு விவசாயிகளை தயார் செய்ய வேண்டும். லால்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்க பல்வேறு இடங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. எதற்காக என நெடுஞ்சாலை துறை விளக்கம் தர கோருகிறோம். திருச்சி மாவட்டத்தில் முசிறி, தொட்டியம், மண்ணச்சநல்லூர் வட்டங்களில் கோரை சாகுபடி பிரதான பயிராக உள்ளது. அதன் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய அளவு உரம் கிடைப்பதில்லை. உரம் வாங்கும்போது பிற பொருட்கள் வாங்க வற்புறுத்தப்படுகிறது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை மாற கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே யூரியா விற்பனை செய்ய வேண்டும் என்றனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னிற்கு ரூ. 4,000 விலை நிர்ணயிக்க வேண்டும். சின்ன வெங்காயத்திற்கு காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய அரசே கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலம் எடுப்பு சட்டம் 2023ஐ கைவிட வேண்டும் என்றனர். இதேபோல விவசாய சங்கத்தினர் பலர் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.