Rock Fort Times
Online News

பாரதிதாசன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 7 மாத ஊதியத்தை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சருக்கு கோரிக்கை மனு…!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர், கல்லூரிக்கல்வி இயக்குநர்,
திருச்சி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஆகியோருக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயு டி) மாநில தலைவர் எம்.எஸ்.பாலமுருகன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் உறுப்புக்கல்லூரிகளில் தற்போது பணியாற்றி வரும், 49 விரிவுரையாளர்கள், 34 கெளரவ விரிவுரையாளர்கள் மற்றும் 33 அலுவலர்கள் ஆக மொத்தம் 116 ஆசிரியர்கள் – அலுவலர்களுக்கு, கடந்த 2023 நவம்பர் முதல் 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஏயுடி நடத்திய பல்வேறு கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகளின் விளைவாக, அரசின் உயர்கல்வித்துறைச் செயலர், ஊதியத்தினை உடனடியாக வழங்குமாறு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 அரசுப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கு, இரண்டுமுறை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து
ஏயுடி நடத்திய “குறுஞ்செய்தி போராட்டத்தினை” அடுத்து, உயர்கல்வித்துறை செயலர், கடந்த 2024 ஏப்ரல் 12-ம் தேதியிட்ட, இப்பொருள் குறித்து அனுப்பிய தனது மூன்றாவது கடிதத்தில், “ஆசிரியர்களுக்கு ஊதியம் உடனடியாக வழங்கிட” அறிவுறுத்தியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.செல்வம் ஊதியம் வழங்க இதுநாள்வரை மறுத்து வருகிறார். எனவே, வழங்கப்படாமல் விடுபட்டுள்ள அலுவலர்களின் ஊதியப் பிரச்சைனையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமென ஏயுடி கேட்டுக்கொள்கிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 10 மேனாள் உறுப்புக்கல்லூரிகளில் (தற்போது அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள, லால்குடி, ஒரத்தநாடு, பெரம்பலூர், அறந்தாங்கி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், வேப்பூர், ஸ்ரீரங்கம்) பணியாற்றி வரும் மணி நேர விரிவுரையாளர்களின் மாதாந்திர ஊதியத்தினை, கெளரவ விரிவுரையாளர்களுக்கு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ளது போல், 01-01-2020 முதல், மாதாந்திர ஊதியம் ரூ. 20 ஆயிரம் மற்றும் 1-6-2023 முதல் மாதாந்திர ஊதியம் ரூ 25 ஆயிரமாக உயர்த்தி நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊதியம் மற்றும் உயர்த்தப்பட்ட ஊதியம் ஆகியவை தொடர்ந்து, அரசு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் மறுக்கப்படும் சூழலில், வாழ்வாதாரத்தினை இழந்து வாடும் ஆசிரியர்கள் – அலுவலர்கள், 14-06-2024 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல், திருச்சி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில், “முற்றுகை போராட்டம்” நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்