Rock Fort Times
Online News

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடியில் சிலை- மணிமண்டபம்……

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் என்னை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர். தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர். அவரது சமூக பங்களிப்பினை போற்றும் வகையிலும், பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டும் அவரது பிறந்த நாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்