பாஜகவுக்கு வாக்களிக்காமல் ஒதுக்கிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதில்லை- திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்,சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் மு.மதிவாணன் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை கழகப் பேச்சாளர் தீக்கதிர் கருணாநிதி, தலைமை பேச்சாளர் சாவல்பூண்டி சுந்தரசேன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங்குடி’ என்ற திருக்குறளை படித்தார். உலகில் உள்ள உயிர்கள் வாழ மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டில் குடிமக்கள் வாழ நல்லாட்சி தேவைப்படுகிறது என்பது தான் அதன் விளக்கம். நிர்மலா சீதாமராமன் தமிழையும், வள்ளுவனையும் பாராட்ட படிக்கவில்லை. மோடியை பாராட்ட, போற்ற படித்தார். நிர்மலா சீதாராமனுக்கு, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓங்குதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்ற குறளை நினைவுப்படுத்துவோம். அதாவது இருப்போர், இல்லாதோர் என்று இல்லாமல் கிடைத்ததை பகிர்ந்து எல்லா உயிரும் வாழ வேண்டும் என்பதற்கு ஈடானது எதுவும் இல்லை என்பது கருணாநிதியின் விளக்கம். மத்திய நிதிநிதி அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழகத்தின் பெயரை உச்சரிக்காமல், தமிழகத்தின் முக்கிய திட்டங்களை புறக்கணித்துள்ள மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம். மாநில நிதிநிலை அறிக்கை என்றால் ஒரு மாவட்டம் மட்டும் பயன்பெறும் அறிக்கையாக இருக்காது. ஒட்டுமொத்த மாவட்டமும் பயனடையும் வகையில் இருக்கும். ஆனால் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த திருச்சியில் படித்த நிர்மலா சீதாராமன், ஒரே ஒரு திருக்குறளை சொல்லிவிட்டு தமிழகத்தை அதோடு விட்டுவிட்டார். கடந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திரா…ஆந்திரா… என்றனர். இப்போது பீஹார், பீஹார் என தெரிவித்துள்ளனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நிதிநிலை அறிக்கை சமர்பித்துள்ளனர். எந்தெந்த மாநிலம் பாஜகவுக்கு வாக்களிக்காமல் ஒதுக்கியது என்பதை கண்டறிந்து அந்த மாநிலங்களை எல்லாம் வஞ்சிக்கும் வகையில் நிதி ஒதுக்கவில்லை. இது மத்திய பட்ஜெட் அல்ல, ஓரவஞ்சனை பட்ஜெட்’ .இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், சபியுல்லா, செந்தில், நிர்வாகிகள் கோவிந்தராஜ், அ. த.த. செங்குட்டுவன், மூக்கன், லீலா வேலு, பகுதிச் செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், ராஜ் முகமது, ஏ.எம்.ஜி விஜய்குமார், பாபு, சிவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக், வேங்கூர் தனசேகரன், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சாதிக் பாட்ஷா மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் பகுதி செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
Comments are closed.