Rock Fort Times
Online News

திருச்சியில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க அதிநவீன அபராதம் விதிக்கும் கேமராக்கள் தினமும் 8 ஆயிரம் வழக்குகள் பதிவாவதாக தகவல்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து,அபராதம் விதிக்கும் நவீன ஏ.எம்.பி.ஆர் கேமராக்கள் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. திருச்சி மாநகரில் சங்கர் ஜிவால் போலீஸ் கமிஷனராக இருந்தபோது டெல்லிக்கு அடுத்தபடியாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறைகளை கொண்டு வந்தார். இந்த முன்மாதிரி திட்டத்தை பின்பற்றி தான்,சென்னை,கோவை, ஆகிய நகரங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஏ.எம்.பி.ஆர் எனப்படும் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னேஷன் கொண்டுவரப்பட்டது. இது திருச்சி மாநகரில் முக்கிய இடங்களில் உள்ள போக்குவரத்து விதிமுறைகளில் செல்வோர்களை தாமாகவே கண்காணித்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும். இதுகுறித் தகவல் வாகன ஓட்டிகளின் செல்ஃபோனுக்கு செல்லும். மாநகரில் சில இடங்களில் மட்டுமே இந்த கேமராக்கள் அப்போது பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளிலும் இந்த கேமராக்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரை – சென்னை பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் வரவுள்ள பஞ்சுப்பூர், எடமலைப்பட்டி புதூர் திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம், தஞ்சாவூர் சாலையில் உள்ள பாப்பா குறிச்சி, திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அழகிரி புரம்,குழுமணி சாலையில் உள்ள லிங்கநகர்,வயலூர் சாலையில் உள்ள உய்யகொண்டான் திருமலை, புதுக்கோட்டை சாலையில் உள்ள செம்பட்டு, கரூர் சாலையில் உள்ள குடமுருட்டி பாலம் என மொத்தம் 9 சோதனை சாவடிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகருக்குள் வரும் வாகனங்கள், மாநகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை இந்த கேமராக்கள் துல்லியமாக கண்காணிக்கும். சோதனை சாவடிகள் உள்ள டவர்கள் மூலம் இந்த பதிவுகள் அந்தந்த காவல் நிலையங்களுக்கும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பி பதிவு செய்யப்படும். இந்த பதிவுகளை குறிப்பிட்ட சில வாரங்கள் வரை பாதுகாத்து வைக்க முடியும். இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்வது, பைக்குகளில் மூன்று பேர் செல்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு தற்போது நாளொன்றுக்கு 8 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்படுவதாக திருச்சி மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்