Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…- 15- ம் தேதி தொடங்குகிறது…!

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரடியாக சென்றடையும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்கிற திட்டம் வருகிற 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் படி, ஜூலை 15 முதல் நவம்பர் வரை 351 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், நகர்ப்புறங்களில் 108 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 243 முகாம்களும் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள அரசு துறைகளின் சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்குவர். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று அங்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்