திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள சிந்தாமணி பல்பொருள் அங்காடி வளாகத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கடையில் வைத்து தினமும் மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த கடைக்கு பெண்கள் நடுங்கியபடியே வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அந்தவகையில் நேற்று மாலை இந்த ரேஷன் கடைக்கு பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் ரேஷன் கார்டை கொடுத்து அரிசி கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அந்த ஊழியர், அந்தப் பெண்ணை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அந்த பெண்ணின் கணவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு ஊழியர் ஒருவர் பணியின்போது மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு இருக்க ரேஷன் கடை ஊழியர் ஒருவர் மது அருந்திவிட்டு பணியாற்றியதோடு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளார். ஆகவே, அவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.