ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா குறித்த ஆலோசனை கூட்டம்…
கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது...
திருச்ச ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வருகிற 12ம்தேதி தொடங்கி ஜனவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா 23ம்தேதி அதிகாலை நடைபெற உள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பக்தர்களுக்காக குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அம்மாமண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் அதிக எண்ணிக்கையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். பக்தர்கள் நீராடுவதற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் அமைப்பதோடு, அது குறித்த வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் , துணை கமிஷனர் அன்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.