Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தை தேரோட்ட திருவிழா- கொடியேற்றத்துடன் துவங்கியது…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர்  சுவாமி கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களும் சிறப்பு வாய்ந்தது தான். சமீபத்தில் தான் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று முடிந்தது. அதற்கு அடுத்தபடியாக தைத்தேர் திருவிழா இன்று(02-02-2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழா வருகிற 12-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் அதிகாலை 4 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 6.30 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 6.45 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் நாளை (3-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

இரண்டாம் நாளான நாளை 3ம் தேதி காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. 4-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 5-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும், 6-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும், 7-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 8-ந்தேதி நெல்லளவு கண்டருளிகிறார். 9-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந்தேதி( திங்கட்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறார்.

காலை 5 மணிமுதல் காலை 5.45 மணிவரை ரதரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 11-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்