Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்- நாளை நடக்கிறது…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு, சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிர்மா திருநாள் எனும் கோரதம் (பங்குனி தேர்) ஆகிய விழாக்களில் நம்பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருள்வார்.
இதேபோல, மாசி மாதத்தில் நடைபெறும் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவார். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் நாளை (06-05-2024) காலை நடைபெறவுள்ளது. முன்னதாக நாளை காலை நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து அதிகாலை 4-30 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு சித்திரை தேர் மண்டபத்தை சென்றடைகிறார்.

பின்னர், திருத்தேரில் மேஷ லக்னபடி காலை 5.15 முதல் 5.45 மணிக்குள் எழுந்தருளி 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், மாநகராட்சி சார்பில் கழிவறை, குடிநீர் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்