ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை(06-05-2024) காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் முதல் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.


இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கவுள்ளதை முன்னிட்டு இன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரெங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமணன், அறங்காவலர் நளாயினி, ஸ்தலத்தார்கள் ரமேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பனிடம் வழங்கினர். நாளை சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார்.

Comments are closed.