Rock Fort Times
Online News

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு…

 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் படகுகள், வலைகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில், இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி கொள்ளையடித்துச் செல்லும் சம்பவமும் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த மாதம் 16 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 22 மீனவர்களில் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களில் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் முருகனுக்கு மட்டும் 24 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்