தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…- தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு!
பீகாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. போலி வாக்களாளர்கள், இருவேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல் போன்ற முறைகேடுகளை தவிர்க்கவே, இந்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும், முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தேர்தல் ஆணையம் இந்த முயற்சிகளை நீண்ட காலத்திற்கு பிறகு மேற்கொண்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு முன்பாக (2002-2004) கடைசியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. நீண்ட வருடங்களாக இது தடைப்பட்டு இருந்தது. அதற்கான முன்னெடுப்பாக பீகாரில் தற்போது வெற்றிகரமாக வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்துள்ளது” என்றார். மேலும் அவர் கூறுகையில், தற்போது விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில், வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படவுள்ளன. தமிழ்நாடு, புதுவை, கேரளா, குஜராத், உ.பி, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும். இதற்கான பயிற்சிகள் நாளை முதல் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

Comments are closed.