ஆங்கில புத்தாண்டு 2026 பிறப்பையொட்டி, திருச்சி மாநகரப் பகுதியில் இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், பெரியகடை வீதி, என்.எஸ்.பி. சாலை, தில்லைநகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில நட்சத்திர விடுதிகளில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து புத்தாண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் “ஹேப்பி நியூ இயர்” எனக் கூறியபடி வலம் வந்தனர். சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தனர். கண்கவர் வானவேடிக்கைகளும் நடத்தப்பட்டன. சமூக வலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்-அப் மூலமாகவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், புனித சகாயமாதா பசிலிக்கா, அரிஸ்டோ ரவுண்டானா யோவான் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கியமாதா ஆலயம், சந்தியாகப்பர் ஆலயம், மெயின் கார்டு கேட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மாம்பழச்சாலை அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இன்று காலையும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோவில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மேக்குடி ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அத்துமீறி சென்ற இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் மாநகரம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளில் கேக் மற்றும் இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Comments are closed.