நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மாதாவை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆரோக்கிய மாதா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்தவகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 28.08.2025 முதல் 09.09.2025 வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை, நாகூர், காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று முக்கிய ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்து 28.08.2025 முதல் 09.09.2025 வரை இரவு, பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு நிர்வாக இயக்குனர் தசரதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.