சுதந்திர தினம் உட்பட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…* இதுவரை 66 ஆயிரம் பேர் முன்பதிவு!
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறைகள் வருவதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை வருகிறது. அதைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியும் வர உள்ளதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு, வியாழக் கிழமை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, 15-08-2025 சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13-ம் தேதி (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும், 14-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15-ம் தேதி(வெள்ளிக் கிழமை) மற்றும் 16 ம் தேதி (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல,
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14-ம் தேதி 100 பேருந்துகளும், 15 -ம் தேதி வெள்ளிக் கிழமை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 17-ம் தேதி அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.