தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் சிலர் அழுகிறார்கள்…- ரூ.8300 கோடி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு…
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்கு நடுவே ஏற்கனவே அமைக்கப்பட்ட பாம்பன் பாலம் பழுதடைந்ததால் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(06-04-2025) திறந்து வைத்ததோடு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இன்று ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ஒப்படைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ராமேஸ்வரம், பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். பாம்பன் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்து பாலம். ஆன்மிகமும், அறிவியலும், ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல்கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். புதிய ரயில் திட்டங்களால் ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிணைந்தால் நாடு வளர்ச்சி, வலிமை பெறும். சுற்றுலா, வணிகத்திற்கு புதிய பாம்பன் பாலம் வழிவகை செய்யும். நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த திறனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் கூட, சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும்.இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் ரயில்வே துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. ஏழை மக்களுக்கு 12 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஒரு கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். மக்கள் மருந்தகங்களில் 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 1400 க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்வளத்துறை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உதவி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டது. தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலிருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள். நன்றி வணக்கம் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.