தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR-Special Intensive Revision) கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4-ம் தேதியுடன் இந்த பணிகள் முடிவடைய உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர் படிவங்களை கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், எஸ்ஐஆர் பணிகளை அவசர கதியில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது எஸ்.ஐ.ஆர் புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சி.குமார், அ.பூபதி, குபேரன், எஸ்.ரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட ஒருமனதான முடிவின்படி கடந்த 18ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வழங்கப்பட்ட அதிகமான பணி அழுத்தங்களை களைந்திடவும், பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிடவும் வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுமையாக புறக்கணிப்பு செய்யப்பட்டது. இதனால், வருவாய்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் ஆகியோர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். இதன் அடிப்படையில் அனைத்து மாநில நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.