ஒரு குப்பி ரூ.7க்கு வாங்கி போதை ஊசி தயாரித்து ரூ.300க்கு விற்ற திருச்சி போதை கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல்கள்…!
திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை ஊசி மற்றும் மாத்திரை விற்று வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதன் பேரில், மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், போலீசார் போதை கும்பல் குறித்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது திருச்சி உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை ஊசி விநியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார் அந்த கும்பலை பிடிப்பதற்காக வடவூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வந்த சிலருக்கு போதை ஊசி விநியோகம் செய்த அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 32), இப்ரான் ( 23), சாலை ரோடு பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து தனியார் வெப்சைட் ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து பெற்றுள்ளனர். மேலும், டாக்டர்கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து அதில் டாக்டர்கள் போல் கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால் மூலம் வரவழைத்துள்ளனர். மேலும், பள்ளி- கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்பதற்காக நெட்வொர்க் அமைத்து அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு நாள்தோறும் போதை மருந்துகளை விநியோகம் செய்துள்ளனர். அவர்கள் ஒரு குப்பி மருந்தை ரூ.7க்கு வாங்கி அதனை ரூ.300க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர்.இந்த போதை கும்பல் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Comments are closed.