Rock Fort Times
Online News

திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்: அரசு பள்ளியில் சமையல் பொருட்கள் சூறை- குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதால் பரபரப்பு…!

திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கைச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று( ஜூலை 14) காலை உணவு சமைப்பதற்காக சமையல் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அச்சமடைந்த சமையலர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி வந்து பார்த்தபொழுது, அங்கு மாணவர்கள் குடிநீர் அருந்தும் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த தொட்டிக்குள் மனித கழிவு கொட்டப்பட்டிருந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டு இருந்தன. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு, மீதம் உள்ள பொருட்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் பள்ளியில் மலம் கலந்த குடிநீர் தொட்டி, சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்களையும் பார்வையிட்டு, ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்புச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்தனர். இது குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருவதால் இதில் சாதிய பிரச்சினை ஏதுமில்லை, குடிபோதை ஆசாமிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும். தவறு யார் செய்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவாரூர் அருகே காரியாகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்