திருச்சி, துறையூர் அருகே பள்ளியை திறந்ததும் “ஷாக்’: கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டிலேயே மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 34 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டே ஆகிறது. தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இன்று(22-09-2025) பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையை திறந்தார். அப்போது அவர் ‘ஷாக்’ அடித்தது போலநின்றார். அப்போது ஒரு வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மாணவிகள் அமரும் நாற்காலியில் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்த சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கிடந்தன. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது அசம்பாவித சம்பவம் நடந்தது தெரியவந்தது. பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் அவர்கள் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக பள்ளி துவங்கும் முன்பு இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து முசிறி கல்வி மாவட்ட அலுவலர் கனகராஜ் விரைந்து வந்து பெற்றோர்களை சமாதானப்படுத்தினார். அப்போது பெற்றோர்கள் தரப்பில், இந்தப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டே ஆகிறது. அதற்குள் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளன. குழந்தைகள் உள்ளே அமர்ந்து இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். இதற்கு யார் பொறுப்பு?. இந்த கட்டிடத்தை கட்டியவர்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டியுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதுகுறித்து மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரி உறுதி அளித்தார். அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.