பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. கலைப்புலி பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ஜி.சேகரன் ‘யார்?’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகம் ஆனார். ‘ஊரை தெரிஞ்சுகிட்டேன்’, ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். ‘ஜமீன் கோட்டை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் ‘கட்டுவிரியன்’ என்ற படத்தை இயக்கி, இசையமைத்து இருந்தார். வினியோகஸ்தராக பல படங்களை வெளியிட்டும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த கலைப்புலி சேகரன், இதற்கான சிகிச்சைகளும் பெற்று வந்தார். சமீபத்தில் கூட சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதற்கிடையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலைப்புலி சேகரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி சேகரன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தான் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.