திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் தலைவராகப் பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் எஸ்.கணேசன். தொலை உணர்வுத் துறையின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்கள் இருவர் மீதும் 2 மாணவிகள் தனித்தனியாக பாலியல் துன் புறுத்தல் புகார்கள் அளித்திருந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உள்ளக புகார் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், இருவரும் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களைப் பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்ப கடந்த செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்று, இருவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கல்லூரிக் கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறுகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு கன்வீனராக, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறார். தற்போது 2 மாணவிகள் புகார் அளித்த விவகாரத்தில், நடவடிக் கைக்கு உள்ளான பேராசிரியர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Comments are closed.