மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் “தமிழ்த்தாய் தலை குனிந்து விடுவாள் நிமிரவே முடியாமல்”…!
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வதுண்டு. மனித வாழ்க்கையில் இந்த நால்வருக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. அதாவது நம்மை பெற்றெடுத்த தாய், தந்தை, நமக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர், நம்மை வாழவைக்கும் தெய்வம். இவர்களை ஒருபோதும் மறக்க கூடாது என்பதுதான் இதன் பொருள். இதில் தாய்- தந்தையருக்கு அடுத்த இடம் ஆசிரியர்களுக்கு. அதற்கு அடுத்த இடத்தில் தான் தெய்வம் வருகிறது.
அந்த அளவிற்கு ஆசிரியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆம்! அவர்கள் தான் நமக்கு கல்வி போதிக்கிறார்கள், நம்மை செம்மைப்படுத்துகிறார்கள், அறிவு கண்ணை திறக்க பாடுபடுகிறார்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆம்! கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்களில் ஒரு சிலர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நெஞ்சில் ஈட்டி பாய்வது போல இருக்கிறது. இதனை நாம் கேள்விப்படுகிறோம், கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு உதாரணமாக சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அந்தப் பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். பள்ளிகளில் தான் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இதனை மறுப்பதற்கு இல்லை, மறைப்பதற்கு இல்லை.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தின. இன்னும் அந்த தீ அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கின்றது. மேலும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது உடம்பை இரணமாக்கும் கொல்லன் பட்டறை காய்ந்த இரும்பை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துவதாய் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தற்போது பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் தாய்மார்கள் இன்று பள்ளியில் என்ன சொல்லி கொடுத்தார்கள் என்பதை விட யாரும் பாலியல் தொல்லை கொடுத்தார்களா என கேட்கும் அவலநிலை தொடங்கியதாகவே உணரப்படுகிறது.இதனை இப்படியே விட்டு விட்டால் எதிர்காலம் எங்கு போய் முடியும்?.
தாயாய், தந்தையாய் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவிகளிடம் எல்லை மீறுவது எவ்வளவு வெட்கக்கேடான செயல். கல்வியறிவு பெற்றால் மட்டுமே ஒரு நாடு தலைசிறந்து விளங்க முடியும். இதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகிறது.
மாணவ, மாணவிகளின் வருகைக்காக விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. ஏழை, மாணவ மாணவிகளுக்கு காலை உணவு ,மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால், பொறுப்பற்ற சில ஆசிரியர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்படுகிறது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் பள்ளிகளில் நடைபெறாமல் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி பணிநீக்கம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், பாலியல் குற்றங்களை தலைமை ஆசிரியர் கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்தால் பல்வேறு சங்க ரீதியான அமைப்புகளை வைத்துக்கொண்டு செயல்படும் ஒரு சில ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை மிரட்டும் சம்பவமும் அறியப்படுகிறது. அதனையும் ஆராய்ந்து அறிந்து அரசு களைய முன் வர வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்க அரசு தவறினால்
” தமிழ்த்தாய் தலைகுனித்து விடுவாள் நிமிரவே முடியாமல்”.
Comments are closed.