திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளும் லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் ஏழு பேர் படுகாயம்…

சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இன்று ( 03.11.2023 ) அதிகாலை திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே தனியார் பேருந்து தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி கண்ணாடி உடைந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும், ரோந்து போலீசார் விரைந்து வந்து பயணிகளை எமெர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியேற்றி கொண்டிருக்கும் போது, மதுரை செல்லும் தனியார் பேருந்தும், தூத்துக்குடி செல்லும் டாரஸ் லாரியும் ஒன்றோடு ஒன்று முந்துவதற்கு முயன்ற போது, உரசி விபத்து ஏற்பட்டு, ஏற்கனவே விபத்தாகி நின்ற சாயல்குடி தனியார் ஆம்னி பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வந்த பயணிகள் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்தின் பின்னால் வந்த இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு நான்கு பேருந்துகள் ஒரு லாரி என அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விபத்துக்கு காரணம் ஓட்டுநர்களின் அலட்சியம் எனவும் தொியவந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.