Rock Fort Times
Online News

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும்- திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் திலக் பேச்சு…!

திருச்சி நகர வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா  திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. நகர வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்பழகன் வரவேற்று பேசினார். பொருளாளர் சற்குருநாதன், துணைத் தலைவர்கள் முத்துமாரி, தியாகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் திலக், முதலாவது சிறப்பு மாவட்ட நீதிபதி நந்தினி, இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிபதி ஜெய்சிங், கூடுதல் மாவட்ட இரண்டாவது நீதிபதி சரவணன் மற்றும் நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் திலக் பேசியதாவது:- வழக்கறிஞர்கள்சமூகத்தின் முன்னோடிகள். சட்டப்படிப்பு தொடங்குவதற்கு முன்பே வழக்காடிகள் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளாக இருந்தார்கள். சுதந்திரப் போராட்டம் நடத்தியவர்களுக்கு வழக்கறிஞர்கள் வழிகாட்டிகளாக இருந்தார்கள்.சுதந்திரம் பெற்ற பின்பு இந்த சமூகத்தை கட்டமைப்பதற்கு அரசியலமைப்பினை உருவாக்கியவர்களும் வழக்கறிஞர்கள் தான். ஆகவே தான் வழக்கறிஞர்களை சமூகத்தின் பொறியாளர்கள் என சொல்கிறார்கள்.

வழக்கறிஞர் என்பது மதிப்புமிக்க சொத்து. இன்றைக்கு இளம் வழக்கறிஞர்கள் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சமூக பொருளாதார சூழலுக்கு இடையே இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் துணையாக தேவையான பொருளாதார உதவிகளை செய்து அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கு பணித்தளங்களில் பாதுகாப்பு உணர்வை நாம் ஏற்படுத்தி அவர்களுக்கான இடத்தை உருவாக்கித் தர வேண்டும். வழக்கறிஞர்கள் கண்டிப்பாக தங்கள் வாகனங்களுக்கு காப்பீடு செய்து ஓட்டுநர் உரிமம் பெற்று தலைக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்