அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். அதில் தொடங்கிய கருத்து மோதல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. இதற்கிடையே கடந்த 1-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5-ந்தேதி (நேற்று) அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார். அதன்படி நேற்று காலை செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் ‘கெடு’ விதித்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.