Rock Fort Times
Online News

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு… * கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சியா? –

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதற்காக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியுள்ளார். இதேபோல, அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். செங்கோட்டையன் ஏற்கனவே பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். ஆனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாரோடும் கூட்டணி கிடையாது, 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று அறிவித்த சீமான், நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார் என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எப்படியாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் முன்னெடுப்பாக உள்ளது. இதற்காக பிரிந்த அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வைத்துள்ள சீமானையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என்பது பாரதிய ஜனதா கணிப்பாக இருக்கலாம் என்றும், இதற்காகவே சீமானை அழைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக- பாரதிய ஜனதா கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதில் நாம் தமிழர் கட்சி கட்சியும் இணையுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பதை சீமான் தான் விளக்க வேண்டும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்