நாம் தமிழர் கட்சி சார்பில், கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டம் நடத்திய சீமான், பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார். இதற்கு கண்டனம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேனியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் போட்டார் சீமான். இந்தக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு மையில் கடுமையாக விமர்சித்தார் நாதக நிர்வாகியான கல்யாணசுந்தரம். அதை ரசித்த சீமான், அந்த மேடையிலேயே அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தார். இந்த நிலையில், கல்யாணசுந்தரத்தை மாற்ற வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நாதக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களை அழைத்துப் பேசிய சீமான், கல்யாணசுந்தரம் தான் வேட்பாளர். நான் சொல்வதை கேட்டால் கேளுங்கள்… இல்லாவிட்டால் வெளியேறுங்கள் எனச் சொன்னதாகத் தெரிகிறது. இதையடுத்து, நாதக தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில இணைச் செயலாளர் சுபாஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்து தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார். இவரை தொடர்ந்து நாதக வழக்கறிஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் பிர பாகர மூர்த்தி, குருதிக்கொடை பாசறை செயலாளர் ராமராஜ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சந்தித்து திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Comments are closed.