திருச்சியில் நாளை( நவ. 10) முதல்வர் செல்லும் பாதையில் நடக்கும் சுபநிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்… * மக்கள் நீதி மய்யம், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர். கிஷோர்குமார் வேண்டுகோள்!
மக்கள் நீதி மய்யம், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாளை (10.11.2025)ந் தேதி சுபமுகூர்த்தம் ஆகும். மேலும், நாளை தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவிற்கு சோமரசம்பேட்டைக்கு வருகைதர உள்ளார். இப்பகுதி குறுகலான சாலை பகுதி என்பதோடு மக்கள் அடர்த்தியான வணிகவளாகம், கல்லூரிகள் நிறைந்த பகுதி. இப்பகுதியில் தான் வயலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் நூற்றுகணக்கான திருமணங்கள் வயலூர் முருகன் கோவிலில் நடைபெறும். இப்பகுதியில் திருமண மண்டபங்களும் அதிகம். இந்த திருமண மண்டபங்கள் அனைத்துமே நாளை இதர சுப நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை திங்கட்கிழமை என்பதால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் வருகை தருவார்கள். அதேபோல வேலைக்கு செல்ல அநேக நபர்கள் இச்சாலையை தான் பயன்படுத்துவார்கள். எனவே, திருச்சி மாநகர காவல் துறை இந்த விபரங்களை அடிப்படையாக கொண்டு முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் கூடுதல் பாதுகாப்பை மேம்படுத்தி, இப்பகுதியில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இன்னல்களும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.