தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தின் முடிவில் கூட்டணி தலைவர்கள் கூட்டம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அன்று இரவு நடைபெற்றது. அதில் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொகுதி பங்கீட்டை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்தாலோசித்து இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவி யாருக்கு கொடுப்பது என்பது குறித்தும் விவாதித்தனர். பின்னர், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் ஒன்றையும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியதாகவும், இவர்களை தேர்தல் பணியில் ஈடுபடாத துறைக்கு இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யப்பட்ட பட்டியல் குறித்து, அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, நாளை(மார்ச் 4) மாலை சென்னையில் ஆலோசிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, வருகிற 6-ம் தேதி கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.