Rock Fort Times
Online News

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு- மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்…!

பள்ளி இறுதி தோ்வுகளுக்கு பிறகு மாநிலம் முழுவதும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மக்களவைத் தோ்தல்  நடவடிக்கைகள், முடிவுகளுக்குப் பிறகு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மாணவா்களின் நலன்கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-க்கு பதிலாக, ஜூன் 10-ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, பள்ளிகள் இன்று (10-06-2024) காலை திறக்கப்பட்டன. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.  பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சாக்லேட் மற்றும் இனிப்பு, ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.  விடுதியில் தங்கி படிக்க உள்ள மாணவ- மாணவிகள் பெட்டி மற்றும் பக்கெட் போன்ற பொருட்களுடன் வருகை தந்தனர்.  அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாணவா்களுக்கான புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால்  வாகனங்களால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்