திருச்சி உருமு தனலெட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் படித்த, 12ம் வகுப்பு மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒன்றாக சந்தித்துள்ளனா். திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உருமு தனலெட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1996- 98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமையாசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அடுத்ததாக, முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். இறுதியாக, முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சியுடன் விழா இனிதாக நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி துவங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.