தமிழகத்தில், நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுவதை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 ரேஷன் கடைகள் வீதம் 100 ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.அதன்படி, ரேஷன் பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி சென்று அவர்களின் கைவிரல் ரேகைப்பதிவு பெறப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது, ஒரு கடைக்கு சராசரியாக 70 வீடுகளுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்க இலக்கு நிர்ணயித்து சோதனை முறையில் வினியோகம் செய்யப்பட்டது. இதில், சராசரியாக 50 வீடுகளுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Comments are closed.