திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 38). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
இதைஅறிந்த திருச்சி தில்லைநகர் 10 -வது கிராஸ் பகுதியில் வசிக்கும் அருள்ஜோதி என்பவர் அவரிடம் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். அதன் பேரில், பூமிநாதன் ரூ.6 லட்சத்தை அருள் ஜோதியிடம் கொடுத்தார். ஆனால், அவர் வாக்குறுதி அளித்தபடி பூமிநாதனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பூமிநாதன்,
தனது நண்பர் கருணாகரன் என்பவரை அழைத்துக் கொண்டு அருள்ஜோதியை பார்க்கச் சென்றார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் தில்லைநகர் 10 வது கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகாமையில் வந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இரண்டு பேரையும் வழிமறித்து தாக்கினர். இதில், காயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .இது தொடர்பாக பூமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தில்லை நகர் 8 -வது கிராஸ் கீழத் தெரு வடவூர் பகுதியைச் சேர்ந்த சோனி என்கிற பிரகாஷ் ( 29 ), வடவூர் பாம்பு என்கிற சரவணன் (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அருள்ஜோதியின் வக்கீல் ஒருவரின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது அதைத் தொடர்ந்து வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.