பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று( ஆகஸ்ட் 13) நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில நடந்த இந்த கூட்டத்தில் துணை தலைவர் கனிமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநில உறுப்பினர் ந.சேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார், மாநகர் நல அலுவலர் மரு.விஜய்சந்திரன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத்சிங், மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பேசிய வாரிய தலைவர் ஆறுச்சாமி, தூய்மை பணியாளர் பணி மகத்தான பணி. எங்களுக்காக உழைப்பவர்கள் நீங்கள். நலவாரியத்தை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள யாரும் கண்டு கொள்ளவில்லை. 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்தவர் முதல்வர் ஸ்டாலின். வெளிநாடு சென்று படிக்கும் தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கு ரூ.20 லட்சம் தந்துள்ளார். அதை
ரூ.35 லட்சமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மலக்குழிகளை சுத்தம் செய்ய ரோபோட் இயந்திரங்கள் பரிட்சாத்திய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திற்கும் வழங்கப்படும். அனைத்து தூய்மை பணியாளர்களும் முககவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆறுச்சாமி கூறுகையில்,
வாரியத்தில் 20 ஆயிரமாக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 10 லட்சம் பேரை வாரிய உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை இணைத்து 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறோம். தூய்மை பணியாளர்களின் போராட்டம் வருத்தமளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் இன்று(ஆகஸ்ட் 13) மாலைக்குள் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.