திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் குவியும் சுமார் 400 டன் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன் வராததால் விடிய, விடிய போராட்டம் நீடித்தது. மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே தூய்மை பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர். இந்நிலையில் இன்று(23-10-2024) காலை போராட்டம் 2வது நாளாக நீடித்தது. ஒரு வழியாக போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிறகு அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Comments are closed.