Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம் …ஏப்.5ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா!

சபாிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 5ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இதில் மற்ற நாட்களில் மற்றும் விஷேச நாட்களில் பூஜைகள் நடைபெறும்போது 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது. பங்குனி ஆராட்டு விழா பம்பையில் நடைபெறும் போது பெண்கள் கலந்து கொள்ளலாம். சபரிமலை கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு விழா இன்று திங்கட்கிழமை தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 9ஆம் திருவிழாவான அடுத்த மாதம் 4ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 5ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை காண அனைத்து வயது பெண்களும் ஆவலோடு காத்திருப்பார்கள். ஆராட்டு திருவிழாவின் போது, சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தாவான ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை நன்கு அலங்கரித்து அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு சுமார் மூன்று மணி நேரம் வரை வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில் அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்வார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்