தமிழ் மாதமான ஆவணி மற்றும் மலையாள மாதமான ‘சிங்ஙம்’ பூஜைக்களுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று திறக்கப்படும் நடை, வருகிற 21ம் தேதி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சபரிமலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டி யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனை எழுப்புவார். தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறுவதில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இதற்காக பக்தர்கள் வெர்ச்சுவல் க்யூ – ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காகவும், சபரிமலையில் தங்கவும் sabarimalaonline.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசன நேரங்களில் “இருமுடி”யுடன் 18-ம் படி ஏறி வரும் பக்தர்களும், இருமுடி இல்லாமல் 18ம் படி ஏறாமல் விரதம் மட்டும் இருந்து “சிவில் தரிசன” வரிசையில் வரும் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே “சிவில் தரிசனம்” அனுமதிக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இன்று திறக்கப்படும் நடை வருகிற 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனவும், காலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.