தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது முதலாகவே, அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஆதரவாளர்களும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றனர். இந்தசூழலில், சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அண்ணாமலைக்கு பாஜக தலைமை சீட் கொடுக்கவில்லை. கோவை வடக்கு தொகுதியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அங்கு வானதி சீனிவாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் வேதனையில் உள்ளனர். மேலும், அந்த தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதனால் அண்ணாமலையும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் பரவியது. இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், நேற்று காரைக்காலில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமையிடம் இருந்து அண்ணாமலைக்கு அவசர அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து அண்ணாமலை நேற்று தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,”தமிழ்நாடு தேர்வு குழுவினர் எனது பெயரை டெல்லிக்கு அனுப்பவில்லை. எனக்கு எப்படி சீட் கிடைக்கும்? இதற்காக டெல்லியில் உள்ள மேலிடத்தை நான் குறை கூறவில்லை. இன்னும் காலம் இருக்கிறது காட்சிகள் மாறத்தான் போகிறது” என பேசியிருந்தார். இந்த சூழலில்தான், டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு அவசர அழைப்பு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில், இளைஞர்கள் மத்தியில் பாஜக பிரபலமடைந்ததற்கு அண்ணாமலை முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதனால், அவரது அந்த திறமையை, தேசிய அளவில் பயன்படுத்த, பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, பாஜக தேசிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.