குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தையும், தர்மத்தையும் கற்பித்து வளர்க்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்.தென் மாநில அமைப்பாளர் பேச்சு!
குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தையும், தர்மத்தையும் சொல்லிக் கொடுப்பதுடன் பரவி வரும் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்மாநில அமைப்பாளர் கா. ஆறுமுகம் கூறினார்.
வீரசிவாஜியின் 350 ஆவது முடிசூட்டிய விழா, டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்விழா, வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்திவிழா ஆகியவைகளை கொண்டாடும் வகையில், ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. காந்திமார்கெட் எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கிய இப்பேரணியை, அரசு மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 1000 த்துக்கும் அதிகமான தொண்டர்கள் சீருடையணிந்து பேரணியில் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக பேரணி சத்திரம், இ.ஆர். பள்ளி மைதானத்தில் அருகே உள்ள தனியார் மைதானத்தை சென்று அடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தென்மாநில அமைப்பாளர் கா. ஆறுமுகம் மேலும் பேசியதாவது :-
நமதுநாட்டில் மொகலாயர், ஆங்கிலேயேர் படையெடுப்புகளையும் கடந்து இன்றளவும் சனாதன தர்மம் நீடிக்கிறது என்றால் நமது முன்னோர்கள் அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்ததுதான். சனாதனம் என்பது பழமையான அறம்சார்ந்த வாழ்க்கை என்று பொருள். ஹிந்து மதம் தர்மத்தின்படி தனது வாழ்க்கை முறையை கட்டமைத்துக்கொண்டது. ஆங்கிலேயேரிடம் இருந்து நமக்கு விடுதலை மட்டுமே கிடைத்தது. இன்னும் நாம் முழுமையான சுதந்திரம் பெறவில்லை என்பதை உணரவேண்டும். ஏனெனில் நாம் தற்போது பரம்பரிய வாழ்க்கையை விட்டு விலகி வருகிறோம். ஒருமனிதன் எப்போது தனது பாரம்பரியத்தில் இருந்து விலகுகின்றானோ அவன் சிந்தனையும், செயல்பாடுகளும் அடிமைத்தனத்துக்கு சென்று விடும். உதாரணத்துக்கு தமிழர்கள் சித்திரை 1 தினத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினாலும், ஆங்கிலப்புத்தாண்டுதான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலை மாறினால் நாம் உண்மையான சுதந்திரத்தை நோக்கிய பாதையில் செல்கிறோம் என்று அர்த்தம்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கும், பொதுக்கூட்டத்துக்கும் தமிழக அரசு தடை விதித்தது. சட்டப் போராட்டம் நடத்தி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். ஏனெனில் இது நமது நாடு. நாம்தான் சட்டத்தை மதிக்க வேண்டும். உலகத்தில் வெறும் 13 பேர்களை வைத்து தொடங்கிய ஆர்எஸ்எஸ் இயக்கம். தற்போது உலகிலேயே லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள பெரிய இயக்கமாக மாறியுள்ளது. கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய முக்கிய சேவைப்பணிகளில் தன்னலமின்றி மொத்தம் 36 பிரிவுகளை ஆர்எஸ்எஸ் தனது அங்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த இயக்கத்துக்கு 98 ஆண்டுகால பாரம்பரிய வரலாறு உண்டு. நாம் நமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தையும், தர்மத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பரவி வரும் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும். தீண்டாமை மற்றும் ஜாதி பேதம் இல்லாத கட்டமைப்போடு நாம் வாழவேண்டும். ஒவ்வொரு இளைஞரும் பலன் தரக்கூடிய 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுசூழலை நாம் பாதுகாக்க முடியும். நமது நாட்டின் வளர்ச்சி சுற்றுசுழல் மற்றும் மனிதாபிமானம், அறம் சார்ந்த வாழ்க்கையை பாதுகாப்பதில் அமைந்துள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன் தலைமை வகித்தார். ஆடிட்டர் எஸ். ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் எஸ். சம்பத், மாநகர தலைவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.