Rock Fort Times
Online News

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு…!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(21-02-2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டு காலம், பத்தாண்டு காலம் என ஒரே நடைமுறையில் இருந்த வரி விதிப்புகள் எல்லாம் இன்று மறுசீரமைக்கப்பட்டு 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. வரியை உயர்த்தி வழங்கினால்தான் தங்களால் நிதி தர முடியும் என்று கூறுகிறது. எனவே தான் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆண்டுக்கு 6 சதவீதம் மட்டுமே வரி உயர்வு செயல்படுத்தப்படும், பேரிடர் காலங்களில் அந்த வரி விதிப்பை நிறுத்தி வைக்கவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளுடைய நீளம் மற்றும் அகலத்தின் அடிப்படையில் அளந்து அதற்குரிய வரிவிதிப்பை விதிக்கலாம் என்று கூறியபோது அதை செயல்படுத்த வேண்டாம் என்று நம்முடைய முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அந்த 6 சதவீத வரிவிதிப்பு மட்டுமே இருக்கணும் வேறு எந்த வரி விதிப்புகளும் இருக்கக் கூடாது என கூறியிருக்கிறார். 2400 சதுர அடிக்குமேல் தான் வரி கூடுதலாக்கப்பட்டது.
அதுதான் தற்போது நடைமுறையிலும் இருக்கிறது. தமிழகம் முழுவதும் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வருகின்றன. மாடுகளைப் பிடித்து அடைத்து வைக்கலாம். அதேசமயம் நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டிய நிலை உள்ளது. எனவே, பாராளுமன்றத்தில் எம்பிக்கள் மூலம் பேசி ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். அதேபோல் ஒவ்வொரு நகராட்சியிலும் அதற்கென்று தனி இடம் ஒதுக்கீடு செய்து இது போன்ற நாய்கள் மற்றும் மாடுகளை பிடித்து அதில் அடைத்து வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். நம்முடைய துறைக்கு மூன்று ஆண்டுக்கு ஏற்கனவே 23,000 கோடியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தார். இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் சீர்மிகு நகர திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது புதிய திட்ட பணிகள் போடப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார். பேட்டியின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்