திருச்சி விமான நிலையத்தில் ரூ.58 லட்சம் மதிப்பிலான பணத்தாள்கள், தங்க நகைகள் பறிமுதல்: 2 பயணிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்படத் தயாராக இருந்த பேட்டிக் ஏர்வேஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும், சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர், பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்களை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து செல்லவிருந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.49.11 லட்சமாகும். இதேபோல், மற்றொரு பயணி, 124 கிராம் எடை கொண்ட 552 எண்ணிக்கையிலான மூக்குத்திகள், தோடுகள் உள்ளிட்டவற்றை உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8.82 லட்சமாகும். மொத்தம் ரூ. 57.93 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இரு பயணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.