பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும்… * முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் இன்று(10-12-2025) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக ஜனநாயக இயக்கம். கட்சிக்காக உழைக்கும் யாரும் பதவிக்கு வர முடியும். திமுக போல் அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எனக்கு பின்னாலும் எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் நாம் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். திமுக எவ்வளவோ கொள்ளையடித்து வைத்துள்ளது. இந்த தைப் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியின்போது ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின், ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இப்போது நான் அதையே கோரிக்கையாக வைக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.