திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எஸ். அய்யம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.ஏ. பட்டதாரியான இவா் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ரகு (44), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலரல் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி (39) ஆகிய இருவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம் என கூறினர். இதனை நம்பிய ரமேஷ், வேலை தேடி கொண்டிருந்த தனது நண்பர்களான பட்டதாரி இளைஞர்கள் சுப்பையன், செல்வராஜ், மனோகரன் ஆகியோருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். உடனே அவர்களும் வேலைக்காக பணத்தை புரட்டினர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ரமேஷ் வீட்டில் வைத்து கடந்த 2018 நவம்பர் 3-ந் தேதி ரூ. 30 லட்சத்து 86 ஆயிரம் ரொக்க பணத்தை ரகு, முத்துச்சாமி ஆகியோரிடம் கொடுத்தனர். பின்னர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு வீ. வருண் குமார் ஐபிஎஸ் உத்தரவின்பேரில், 4 பேரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய ரகு, முத்துசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.