முதியோர், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000: இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
முதியோர், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் இன்று(மார்ச் 3) ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- 3 மாதங்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக 2000 என மொத்தம் 5000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய தினம் (மார்ச் 3) சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் அவரது வங்கிக் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட்டது. சிறப்பு நிதியாக 2,000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4,000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8.000 வீதம் மொத்தம் 1,62, 900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,.870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.